Kizhvanam
  • Home
  • Articles
    • Articles1
  • CommonNews
  • TamilFonts
    • TamilFonts cont...1
    • TamilFonts cont...2
    • TamilFonts cont...3
    • TamilFonts cont...4
    • TamilFonts cont...5
    • TamilFonts cont...6
    • TamilFonts cont...7
  • Tutorials
  • Notices
  • Contacts
Fonts cont... 4

நான், எனக்கு, என்னுடைய, என்னால் எதுவும் முடியுமென தானும் ஒழுங்காகச்
செய்யாது மற்றவர்களோடு சேர்ந்தும் செய்யாது தற்பெருமை பாடும், புல்லுருவிகள்
வாழும் இவ்வுலகில், தன் சொந்த வருமானத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது, ஊரும்
வாழவேண்டும் தானும் முன்னேறவேண்டும், என்ற எண்ணத்தை மனத்தில் கொண்ட
ஒரு முன்னோடி மனிதரை, இந்த இடத்தில் கூறக் கட‌மைப் பட்டிருக்கிறேன்.

ஒரு காலத்தில் காரைதீவுச் சந்தியை இரவுவேளையில் கடந்து செல்வதற்கே பயப்பட்ட காலம்.
அதைப்பற்றி நான் கூறவரவில்லை. இந்தக் காலகட்டத்தில் துணிந்து ஓரு மனிதர் ஒரு படமாளிகையை
சந்தியில் ஆரம்பிக்க வருகிறாரென்றால், காரணம் அது ஊரிலே தான் கொண்ட பற்றுமல்லவா?
அதுவும் பிரச்சனைக்கு உரியவர்களையே தொழிலுக்கு அமர்த்துவது, நினைத்துப் பார்க்க முடியுமா?
ஏன் அவர் இரண்டு ஊர்களுக்குமிடைப்பட்ட மாளிகைக்காட்டிலோ, மாவடிப்பள்ளியிலோ,
மாவடிக்காட்டிலோ, இல்லை வேறு எங்காவது ஓர் நகரத்திலோ இடத்தைத் தெரிவு செய்யவில்லை.
ஊரும் சுமூக நிலைக்கு வருமேயென்ற நல்லெண்ணத்தினாலல்லவா? அந்த Ravi Cinema  இன்று
இருந்த இடமேயில்லாமல் போனாலும், அதை அன்று உருவாக்கிய இந்த நல்லுள்ளமான
காலஞ்சென்ற அமரர் திரு. ராஜகுருநாதனையும் எண்ணிப் பார்த்ததில் இவருக்கு
சமர்ப்பணமாக ராஜகுரு என்ற எழுத்துருவை உருவாக்கினேன். இவரும் ஒரு நல்ல ஓவிய‌ரென்பதோடு,
இவரின் சாதாரண கையெழுத்தையே ஒரு ஆங்கில Font ஆக்கிவிடலாம். அவ்வளவு அழகு. நமது ஊரில் பிறந்த இவர் 
Lake House பத்திரிகைகளான Daily News, Sunday Observer பத்திரிகைகளின் Eastern Region English journalist 
என்பது பலர் அறியாத விடயம்.

Picture


ராஜகுரு என்று நான் பெயர் கொடுக்க வர ‌
அதே பெயரில் எனக்கு மிகவும் பரிட்சியப்பட்ட இன்னுமொரு
உள்ளமும் தானாக‌வே சேர்ந்தது என்னை  மகிழ்சிப்படுத்துகிறது. 

அவர்தான் ராஜகுரு சேனாதிபதி கனகரெத்தினம். இவரைச்
சந்திக்கும் வாய்ப்பையும், நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்
தாபனத்தில் ஒரு ஒலிபரப்பாளனாக வரவும், தளம் அமைத்துக்
கொடுத்ததும் இந்த படமாளிகைதான். அதுவும் அந்த ராஜகுருநாதன்
என்பவர்தான் ஒருநாள் படத்தின் Posters களை எழுதிவிட்டு
வீடுசெல்ல இருந்த என்னை அழைத்து, வழ‌மையாக எங்கள் பட        
மாளிகையில் ஒலிபரப்புச் செய்யும் சோதி, என நாங்கள் அழைக்கும் நண்பர் திரு. நடேசன் அவர்கள் ஏதோ  காரணத்தால் வராமலிருக்க," நீ காரில் ஏறு தம்பி "....   " நீங்க பேசுங்க " என்று முதல் முதலில் விளம்பரம் செய் என Microphone ஐ கையிலே திணித்தவர் என்பதையும் நான் மறக்க முடியாது.

அடுத்து இந்த கனகரெத்தினம் இருக்கிறாரே, இவர் தானும் தன்பாடுமென மிகவும் அமைதியானதும்,
தன்னடக்கமுமான ஓர் பேர்வழி. எப்பொழுதும் கண்ணனின் புகழ்பாடுமிவர், தனக்கென ஒரு தனிப்பட்ட பாணியை
அமைத்துக் கொண்ட அலட்டிக் கொள்ளாத ஒரு அறிவிப்பாளர். ஒலிபரப்புத்துறையே தஞ்ச‌மென வாழ்ந்த அந்த
கண்ணியமான மனித‌ரை ஏதோ காரணத்துக்காக, பழிவாங்கி வெளியே துாக்கியெறியப் பட்டிருந்த காலத்தில் தனது
தனிப்பட்ட ஒரு ‌விளம்பர நிறுவனம் சார்ந்த நிறுவனத்துக்கு ஒரு Design‌ ‌சம்பந்தமாக என்‌‌‌னைச் சந்திக்க, தேடி வந்த
போதுதான், இவர் ‌‌தொழில் சம்பந்தப்பட்ட விடயமின்றி வேறு எதுவும் பேசாமல், ஒன்றாகக் கடமையாற்றிய ஒரு காலத்தில்
இருந்தாலும், ஒவ்வொருவரையும் எவ்வளவு  கணித்து பழகியிருக்கிறார் என்பதையும், என்னைப்பொறுத்தமட்டில் என் தனிப்பட்ட திறமைக்கு எவ்வளவு மதிப்பு கொடுத்து பழகியிருக்கிறார் என்பதையும் கண்டு வியந்தேன். மனம் விட்டு அவர் கதைத்த  போதுதான் ஒரு பண்பான கலைஞன் எவ்வளவு உளம் நொந்துபோய் வாழ்கிறான் என மனம் வருந்தினேன்.


கெட்ட வார்த்தைகளாலும் ஒருவரை புகழலாம்....


Picture


கல்முனையில் நானும் ஒரு ஓவியனாக இருந்த வேளையில்
பல வியாபார நிலையங்களுடன்  தொடர்புகளை ஏற்படுத்தி
விளம்பரப் பலகைகள் வரைய எனக்கு கைகொடுத்து உதவிய
வசந்(தா) தராசபிள்ளை என்கிற நல்ல உள்ளமொன்றை
நினைத்துப் பார்க்கிறேன்.

அப்போது அவர் தொழில் புரிந்த படமாளிகையிலும்
விளம்பர வேலைகளை செய்ய என்னை அறிமுகப்படுத்தினார்.
அத்தருணத்தில் மாற்றியமைக்கப்பட்டு புது உருப்பெற்ற 
'வீனஸ் கபே' உணவகத்தின் விளம்பர சம்பந்தமான வேலைகள்
என்னை வந்தடைந்தன. கடையின் உரிமையாளர் எல்லோரையும்
தங்கம், என்ன தங்கம் என்றுதான் அழைப்பார். பழகுவதற்கு                                   ஒரு நல்ல மனிதர். தனது வேலையாட்களுடன் கண்டிப்பாக பேசும்போது மாத்திரமல்ல சரளமாக அவரது நாவில்                  சரஸ்வதி தாண்டவமாடுவாள். அவர் ஒரு எம்ஜீஆர் பித்தனென்றே சொல்லலாம். " கடை எழுத்தைவிட தங்கம் எம்ஜீஆரை, அந்த மாதிரி தேனீர் குடிப்பதுபோலக் கீறு அது மட்டும் எனக்குப் போதும் என்றார். எனக்கும் என் நண்பர்களுக்கும் நன்றாக மனமுவந்து ஓசியில் வேலை முடியும்வரை விருந்துபசாரத்துக்கும் பஞ்சமில்லை.

நான் வரையும்போது எதிர்க்கடையின் இரண்டாம் மாடியில் என் நண்பர்களோடு கண்கொட்டாமல் பார்த்துக்
கொண்டிருப்பார். எம்ஜீஆரை வரைந்துமுடித்துவிட்ட கையோடு நானும் கீழிறங்கி அவர்களோடு சேர்ந்து பார்வையிடப் 
போனது, அவருக்குத் தெரியாது. வரைந்த படம் அவருக்கு மிகமிகத் திருப்தியான புளகாங்கிதத்தில் எனக்குச் சூட்டிய
புகழ்மாலை அவர் வாயில் வந்த ' அவன் ............. (தணிக்கை) கீறிப்போட்டாண்டா ' என்ற அந்த அமுதவாக்கை கேட்டதும்
வெட்கமாக இருந்தாலும். அப்போதுதான் உணர்ந்துகொண்டேன் ஒருவரை பாராட்ட கெட்டவார்த்தைகளும் உதவுமெனவும், 
நாமும் அவைகளை தேவைக்கு உபயோகப்படுத்தலாமேயென....
 
வசந்தா என்றதும் ஓடிவரும் வசந்த நினைவுகள், அந்த வசந்தத்தை சூறாவளி சினிமா
கொட்டகைக்குள் சூறையாடிவிட்டது.


மாதா, பிதா, குரு, தெய்வம்...

இதில் மாதா, பிதா, அடுத்து குரு........
நல்ல ஆசான்களால் தான் நல்ல பயனுள்ள சிறந்த மாணாக்கர்களை உருவாக்கமுடியும்.
நான் நல்லவனோ கெட்டவனோ நானறியேன்,  ஆனால் எனக்கு, வாழ்நாள் பூராவும் மறக்க முடியாத
நல்ல ஆசிரியர்களிடம், படிக்க மட்டுமல்ல நண்பர்களாக பழகவும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்த வரிசையில் திரு.சிவசம்பு, திரு.மரியதாஸ் ஆகியோர் என் நெஞ்சில் நிறைந்தவர்கள்.
ஆங்கிலமா,  தமிழா சிவசம்பு ஒரு மகுடம். இவரால் இன்று எனதுதுாரில் உயர்ந்தவர்கள் பலர். 
வித்தியாசமான கோணத்தில் மாணவர்களை நன்கு அறிந்து அவர்களுக்கு ஏற்றபடி  அணுகுபவர்.
காரைதீவு மகாவித்தியாலத்தில் படித்த காலத்தில் இரவில் நாங்கள் பாடசாலையில் படிக்கப்போவோம்.
இதற்கு முக்கிய காரணம் சிவசம்பு ஆசிரியர் விடுதியில் தங்கியிருந்தமையே. இரவில் கூட எந்த
ஒரு லாபமும் கருதாது ஒரு மணித்தியாலம் எங்களுக்கு ஆங்கிலப் பாடமெடுப்பார். 

ஒரு சரஸ்வதிபூசை. கலைவிழா நிகழ்ச்சிநிரல் ரோணியோ (அக்கால பிரதி எடுக்கும் மெசின்) பண்ணுவதற்கு
மூலப்பிரதியை எழுதச்சொல்லி சிவசம்பு ஆசிரியர் என்னிடம் பணித்தார். நிரலை எழுதும்போது தலையங்கத்தோடு
அரைவாசியாக சரஸ்வதிபடத்தையும்,  கோட்டுவழி சித்திரமாக வரைந்தேன். இதைப் பார்த்த அவர்
விளம்பரப்பலகைக்கு ஒட்ட பெரிதாக வர்ணத்தில் ஒன்று வரை மோகன் என்றார். வாலிப பராயமல்லவா?
பலவிதமாக வரையப்பட்ட ராதை (கண்ணன்) படங்களிலே மோகங்கெண்ட நான் என் கல்வித்தாயையும்
அழகிய ராதாவாக கற்பனைபண்ணி வீணையைக் கையில் கொடுத்து தாமரைப்பூவின் நுனிக்குக்கீழே
அழிந்த மாதிரியும் அன்னத்தின் தலைமட்டுமே, தெரிவதுபோலவும் வரைந்துவிட்டேன்.
வந்ததடா வினையெனக்கு. சித்திரக்கலையை கொலைசெய்கிறான். கலைத்தாயை கவர்ச்சிக்
கன்னியாக்கிவிட்டான்.... எழுதச் சொல்லிலடங்கா.....இப்படி சில ஆசிரிய, உயர் கலைவகுப்பு மாணவர்களின்
எதிர்ப்புக்கு மத்தியில், எனக்காக வாதாடிய அன்று அதிபராக இருந்த திரு.யோகம் வேலுப்பிள்ளை மற்றும்
மேற்கூறிய இரு ஆசிரியர்களுடன் சேர்ந்து, அதை நீக்காமல் ஆமோதித்த என்மேல் அன்புகொண்ட
சில ஆசிரிய உள்ளங்களையும் நினைவுபடுத்தி பார்க்கிறேன்.


Picture






இன்று ஊரில் இருக்கும் புத்திஜீவிகள் பலருக்கு புத்திசீவிய,
எல்லோரது மனங்களையும் கவர்ந்த,  துடிப்புமிக்க,
அந்த நல்ல உள்ளம் கொண்ட சிவசம்பு,
அந்தச் சிவனுக்கு பணிபுரியச்  சென்றுவிட்டாரோ?.........
                                                                                                                            


                                           தொடர்ச்சி மறு பக்கம்.. 

Picture
Picture
Picture
Picture
Picture
© 2013 Designed & Powered by mogans.com. All rights  reserved