Kizhvanam
  • Home
  • Articles
    • Articles1
  • CommonNews
  • TamilFonts
    • TamilFonts cont...1
    • TamilFonts cont...2
    • TamilFonts cont...3
    • TamilFonts cont...4
    • TamilFonts cont...5
    • TamilFonts cont...6
    • TamilFonts cont...7
  • Tutorials
  • Notices
  • Contacts
Picture
Picture
Picture



வடதுருவத்தின் அருகில் அமைந்த நாடுகளில் வளம்மிக்கதும்,
செல்வம் கொழிப்பதுமான பணக்கார நாடு நோர்வே. ஐக்கிய இராச்சியத்திலிருந்து  என்னுடைய அலுவல் ஒன்றிற்காக
மாசிமாதம் பத்தாம் திகதி நான்  பயணித்திருந்தேன்.
மலைகளிலும், மரங்களிலும் வெண்பனி கொட்டிக்கிடந்தது.
பார்த்த இடமெல்லாம் பரவசம்.மனசிலே மகிழ்ச்சி.
உடலிலே குளிர்ச்சி. மிக நீண்ட  நாட்களுக்குப்பின்
எனக்குள்ளே ஒரு எழுச்சி.நண்பர்களுடன் உரையாடியபோது 
பன்னிரெண்டாம் திகதி படைப்பாளி இ.தியாகலிங்கத்தின்
ஐந்து புத்தகங்களின்  அறிமுக விழா நடைபெறுவதாக அறிந்துகொள்கின்றேன்.... எனக்குள் அதிர்ச்சியும்,  ஆச்சரியமும்.ஐந்து நூல்களா? வியப்பின் விளிம்புக்கே சென்றுவிட்டேன்.
நண்பர் தியாகலிங்கத்தின்  "அழிவின் அழைப்பிதழ்"  என்ற நூலை நான் நோர்வேயில் இருந்த காலத்தில்
பலவருடங்களுக்கு முன் படித்திருக்கின்றேன். தனிப்பட்ட முறையிலும் அவரை எனக்கு தெரியும்.
அமைதியானவர். மண்பற்றும், மொழிப்பற்றும் கொண்டவர். அவரோடு தொடர்புகொண்டு என் வருகைபற்றியும்,
அவரது நூல்களின் அறிமுக விழா  பற்றிய செய்தி குறித்தும் சொல்லி, வாழ்த்தினேன். அவரும் மகிழ்ச்சியுடன்
என்னை  நிகழ்வுக்கு அழைத்துக்கொண்டார்.

மாசிமாதம் பன்னிரெண்டாம் திகதி பி.ப ஐந்து மணியளவில் நானும், என் பால்ய, ஊடக நண்பர் ஒருவரும்
சேர்ந்து அறிமுக விழா நடக்கும் மண்டபத்திற்க்கு சென்றோம். அங்கே எனக்கு பரிட்சயமான பல இலக்கிய
நண்பர்கள் எங்களை வரவேற்றுக் கொண்டார்கள்.  நீண்ட நாட்களின் பின் அவர்களை சந்திப்பதால் சற்று பேசி,
அன்பை  பரிமாறிக்கொண்டபின்  மண்டபத்துக்குள் நுழைந்தேன். உள்ளே வழமைபோல் குறைந்த அளவு கூட்டமே.
நெஞ்சு  கனத்தது.  ஐந்து நூல்களின் அறிமுக விழா. குறைந்தபட்சம் ஒரு நூறு பேராவது வரக்கூடாதா?
என்ற  கேள்வி  என்னுள் எழுந்து மறைந்தது. எமது இலக்கிய படைப்பாளிகளின் ஒவ்வொரு வெளியீட்டு 
விழாக்களிலும்  எழுகின்ற கேள்விதான் இது. என்ன செய்வது?

எமது மக்கள், நமது படைப்பாளிகளுக்கு கொடுக்கும் வரவேற்பு இப்படி இருக்கிறது. இதே மக்கள் கோடம்பாக்கத்தின்
குப்பைகளுக்கும், வன்முறைகளுக்கும்,  அருவருக்கத்தக்க அவலங்களை சொல்லும் திரைப்படங்களுக்கும்
அலையலையாக கூடுவார்கள்.  எமது மண்சார்ந்த இலக்கியங்களையும், அதைப் படைக்கும் படைப்பாளிகளையும்
இவர்கள்  காலம்காலமாக கண்டுகொள்வதில்லை. இது எமக்கு இருக்கும் ஒரு சாபக்கேடு என்று கொள்வோம்.

Picture


சரி, இனி நிகழ்ச்சிக்கு வருவோம்.
திரு.இளவாலை விஜயேந்திரன் அவர்கள் தனது 
வரவேற்புரையோடு தொடங்கினார்.
வந்திருந்த எல்லோரையும் வரவேற்றுக்கொண்டு,
திரு. தியாகலிங்கம் அவர்களின்  அடக்கம்பற்றியும் ,
ஆற்றல் குறித்தும், அவரின் முதல் நாவலான
"அழிவின்  அழைப்பிதழ்" நாவலை  தான் படித்ததாகவும்,
இந்த ஐந்து  புத்தகங்களை அவர் அறிமுகம் செய்வது
அவரின் எழுத்தாற்றலின்  ஆளுமையை காட்டுகின்றதென்றும்,
புலம்பெயர்ந்த இலக்கியப்  படைப்பாளிகளில்  இவர்
தனித்துவம்  பெறுகின்றார், ஏனென்றால் ஒரே
நேரத்தில் ஐந்து நூல்களை அறிமுகம் செய்து
வெளியிடுவது முதல் தடவையாக இந்தமேடையிலே நடக்கிறது.
அதுவும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் 
ஒரு படைப்பாளி தியாகலிங்கம் அவர்கள். அதனால் நாம் வாழும் மண்ணுக்கும்,
எமக்கும் பெருமை சேர்க்கிறார், என்று நறுக்கென நாலு  வார்த்தையில்
அவரை பாராட்டிவிட்டு, அற்புதமாக நிகழ்வின்   அடுத்தகட்டத்திற்கு அழைத்து சென்றார்.

அடுத்து, தியாகலிங்கம் பற்றியும்,அவரது எழுத்தாற்றல் பற்றியும், அவரது குணநல சிறப்புகள்  பற்றியும்,
பல ஆண்டுகளுக்குமுன் அவர் எழுதிய முதல் புத்தகமான  "அழிவின் அழைப்பிதழ்"  தான் சார்ந்திருக்கும்
மித்ர பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டதாகவும், இப்பொழுது நடைபெறுகின்ற இந்த ஐந்து நூல்களையும்
மீண்டும் தன்னுடைய பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவது தனக்கு  மகிழ்ச்சியை தருவதாகவும்,
புலத்தில் வாழும் படைப்பாளிகளில் தியாகலிங்கமே அதிக நாவல்களை ஒரே நேரத்தில்  வெளியிடுகின்றார்
என்பதை தான் உறுதி செய்வதாகவும், தனது பாராட்டுகளையும்,  வாழ்த்துகளையும் காணொளியில் பதிவுசெய்து
அனுப்பியிருந்தார், ஈழத்து இலக்கிய பிதாமகர் என்று  சொல்லக்கூடியவரும், மூன்று தலைமுறை கண்ட
மிக மூத்த எழுத்தாளரும், விமர்சகருமான எஸ்.பொ. என்று இலக்கிய உலகம் போற்றும் திரு.எஸ்.பொன்னுத்துரை
அவர்கள். இவரது  பேச்சும்,  தியாகலிங்கம் பற்றி அவர் கொண்டிருக்கும் அளவற்ற  அன்பும் அங்கு வெண்திரையில்
படக்காட்சியாக விரிந்தபொழுது வசிட்டர் வாயால் வாழ்த்து  பெற்றதுபோல் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தியது 
என்றே சொல்லவேண்டும்.

Picture





அடுத்து, சர்வதேச தமிழர் இதழின் ஆசிரியர் திரு.சண்முகப்பிரபு 
அவர்கள் அழைக்கப்பட்டார்.  அவர், தியாகலிங்கம் தனது இதழில்
சில ஆக்கங்கள் எழுதியவர் என்றும், நாவல் எழுதுவது  எளிதல்ல,
அது ஒரு பிரசவ வலி. அந்த வலியின் பின் வரும் மகிழ்ச்சியே
இந்த அறிமுகம் என்று சொல்லி, அவர் எழுதிய பாராட்டுக்
கவிதையை படித்து பின் அதை வழங்கினார்.

Picture


அடுத்து திரு.சிவதாஸ் மாஸ்டர் அழைக்கப்பட்டார்.
அவர் "பரதேசி"  என்ற நாவல் பற்றி பேசினார்.
நாவல் எழுதுவது ஒரு தவம். அதற்கு  முதல் வரம் வேண்டும்.
தியாகலிங்கம் "வரம்"  என்ற தலைப்பிலும்  ஒரு நாவல்
எழுதி இருக்கிறார். ஆனால் தனக்கு  "பரதேசி" என்ற நூலைக் 
கொடுத்து அதுபற்றி கருத்து  சொல்லக் கேட்டுக்கொண்டார்.
அந்த  தலைப்புக்கும் தனக்கும் பொருத்தமாக இருக்குமோ
என்று  நினைத்தாரோ தெரியாது என்று நகைச்சுவையாக
ஆரம்பித்து, பரதேசி பற்றியும்,அதன் கதைக்களம் பற்றியும்,
அதில் படைப்பாளி கையாண்ட  தமிழ் சொற்கள் குறித்தும்,
குறிப்பாக "ரொம்ப"   "சீக்கிரம்"   போன்ற சொற்கள் தமிழக
சினிமாப் பாணியில் வருவதுபோல் இருப்பதாகவும்
அவற்றை கவனத்தில் கொள்ளவேண்டுமென்றும்,
கேட்டுக்கொண்டார். மற்றும்,சில விமர்சனங்களை அவர்
முன்வைத்தாலும்  ஒட்டுமொத்தத்தில் பரதேசி படித்து
சுவைக்க கூடிய புத்தகமே என்று பாராட்டி 
அமைந்துகொண்டார்.

Picture






அதை தொடர்ந்து தியாகலிங்கத்தின் கவிதை தொகுப்பான
"துருவ சிதறல்கள்"  பற்றி கருத்து  சொல்ல   நோர்வேயில் வாழும்,
இளம் பெண் கவிதாயினி,  திருமதி.கவிதா.ரவிக்குமார் 
அழைக்கப்பட்டார். அதில் இடம் பெற்ற ஒரு சில கவிதைகளை
படித்துவிட்டு, அவற்றோடு தொடர்புடைய ஏனைய  சில கவிஞர்களின்
ஆக்கங்களுடனும் அவர் ஒப்பிட்டார். மேலும்,தனக்கு கவிதைபற்றியும்,
கவிதா உள்ளங்கள் பற்றியும் போதிய அறிவும், தெளிவும் இல்லை என்று அவர்
சொல்லிக்கொண்டு தியாகலிங்கத்தின் கவிதைகளைவிட அவரது நாவல்களே
தனக்கு பிடித்திருந்தன என்பதையும்  அவர் பதிவு செய்துகொண்டு
அந்த கவிதைத் தொகுப்பின் வடிவமைப்பு குறித்தும் , அதில்  இடம்பெற்ற 
படங்கள் பற்றியும் சொல்லி, இதுபோல் இனமானக் கவிஞர் அறிவுமதி,
மற்றும் சில கவிஞர்கள் முன்னரே வெளியிட்டிருக்கிறார்கள் என்றும்
சொல்லி, தனது பாராட்டையும்,வாழ்த்தையும் கூறி முடித்தார்.

Picture



அடுத்து, திரு உமைபாகன் அழைக்கப்பட்டார். இவர்  "வரம்" என்ற நாவல்
பற்றி  பேசவந்தார். முதலில் அவர்  ஒரு நூலின் விமர்சனம் என்பது இரண்டு
விதமாக இருக்க கூடும். ஒன்று நூலில் உள்ள குறைகளையும்,  பிழைகளையும்
சொல்லி படைப்பாளியை மழுங்கடிப்பதும், விமர்சகரின் மேதாவிலாசத்தை 
காட்டுவதாகவும்  அமையும், மற்றது புத்தகத்தை பற்றி புகழ்ந்துதள்ளி
படைப்பாளிக்கு அதிலுள்ள நல்லது கெட்டதுகளை  தெரிந்துகொள்ள
வாய்ப்பில்லாமல் பண்ணுவது. ஆனால் தான் இந்த இரண்டையும்
செய்யப்போவதில்லை  என்றும், உள்ளதை உள்ளபடியே சொல்லியாக
வேண்டும் என்றும் கூறி, மிக நேர்த்தியுடன் தெளிவான  தமிழ் ஓட்டத்தில்
அந்த "வரம்" நாவல் பற்றிய தனது பார்வைகளை முன்வைத்து,
எழுத்தாளரை பாராட்டிய விதம் என்னால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும்,
ரசிக்க கூடியதாகவும் இருந்தது.

Picture
அதைத் தொடர்ந்து "எங்கே"என்ற நாவல் பற்றி திரு. செல்வின்
அவர்கள் பேசினார். அது மூன்று தளத்தில்  நடப்பதாக சுட்டிக்காட்டினார்.
காரைநகர், தமிழ்நாடு, நோர்வே என்று அது விரிகிறதென்றும்,
இதை மூன்று  நாவல்களாக கூட எழுதலாம் என்றும் குறிப்பிட்ட
செல்வின் அவர்கள், அந்த நாவலில் வரும் உரையாடல்களில் 
இடம்பெற்ற நோர்வேஜிய சொற்களுக்கு தமிழில் விளக்கம் தந்திருப்பது,
பிற நாடுகளிலும் உள்ள வாசகர்கள்  புரிந்துகொள்ள கூடிய வாய்ப்பை
அளிக்கிறதென்றும் சொல்லி இந்த படைப்பையும், இந்த படைப்பாளியின் 
உழைப்பையும், அவரின் மண்சார்ந்த உணர்வையும் தான் மதிப்பதாக கூறி,
தியாகலிங்கத்தை  பாராட்டி  முடித்தார்.
 
அடுத்ததாக "திரிபு" என்ற நாவல் பற்றி பேச, திரு. சரவணன் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் நிகழ்வுக்கு  
சமூகமளிக்கவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை. அது எதுவாக இருந்தாலும்,  வருவதாக ஒப்பு  கொண்டபின்
வராமல் விடுவது நாகரிகமில்லை என்பதை அவர் உணர்ந்துகொள்ள வேண்டும்.எனக்கு மிக நெருக்கமானவரும், என்மீது அன்புகொண்டவருமான சரவணன் வராதது வருத்தத்தை  தந்தது.

Picture

தொடர்ந்து மிக நீண்ட இடைவெளிக்குபின்பு நான் சந்தித்த அன்புத்தம்பி
திரு.சர்வேந்திரா அவர்கள்  "எங்கே"  என்ற நாவல் பற்றி தனது கருத்தை கூற
முன் வந்தார். அண்மையில் அவர் கலாநிதி பட்டம்  பெற்றிருந்தார்.
அதற்கு என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நிகழ்ச்சி தொடங்க
முன்னரே  நான் தெரிவித்திருந்தேன். அவர்,தனது உரையில்  " எங்கே "
என்ற நாவல் காரைநகரின்  சிறப்புகள் பற்றியும்,  மற்றும் அரசியல்  குறித்தும்,
கதையின்  நாயகன்  சார்ந்திருந்த  போராட்ட குழு பற்றியும், அந்த போராட்ட 
குழுவின் நல்லது,  கெட்டதுகள் குறித்தும் மூன்று தளங்களில் அந்த நாவல் எடுத்து
செல்வதாகவும், மேலும்  தானும் போராட்ட குழு ஒன்றில் இணைந்து
செயல்பட்டவர் என்றும் தனக்கு ஒவ்வாத செயல்பாடுகளில் இருந்து
ஒதுங்கி கொள்வதுபற்றியும், முடியாத பட்சத்தில் முற்றாக ஒதுங்கியது
குறித்தும் சொல்லி,  இந்தப்  படைப்பாளியின் பார்வையில் இவரது
கதாபாத்திரங்கள் தங்களுக்கு உரிய உணர்வுகளையும், அரசியல் 
பார்வைகளையுமே முன்வைக்கின்றன. இதேபோல் ஒவ்வொரு போராளிக்கும்
வெவ்வேறு  பார்வைகளும்,  உணர்வுகளும், முடிவுகளும் இருக்கும்.
அரசியல் நோக்கு வித்தியாசப்படும். ஆகவே இது தியாகலிங்கத்தின் 
பார்வை என்றாலும், இப்படியான கதைக்களங்களை சிலர் எடுப்பதற்கே
பயப்படுவார்கள்.  இவர் எடுத்துக்கொண்டு அதை நாவலாக வெளிக்கொண்டு
வந்திருப்பது பாராட்டப்படவேண்டியதே என்ற அவர், தான்  மாணவனாக இருந்த பொழுது அவர் சார்ந்திருந்த அமைப்புக்காக         காரைநகரில்தான்  பணிபுரிந்ததாகவும், அந்த நினைவுகள்  இந்த நாவலை படிக்கும்போது நெஞ்சில் நிழலாடுவதாகவும் சொல்லி முடித்தார். 

அதை தொடர்ந்து பேராசிரியர் ரகுபதி அவர்கள் அழைக்கப்பட்டார். அவர் மேடை  ஏறாமல், பல பொல்லாத  விடயங்களை
இந்த படைப்பாளி தொட்டிருக்கிறார் என்று நகைச்சுவையாக கூறிக்கொண்டு  காணொளி  பதிவுகளிலிருந்து தன்னை
விலக்கிக்கொண்டு இருந்தபடியே ஐந்து புத்தகங்கள்  பற்றியும் தன் பேச்சை  தொடங்கினார்.  குறிப்பாக "திரிபு"  என்ற நாவல்
பற்றி கூடவே பேச முன்வந்தார்.  அது இரண்டு "லெஸ்பியன்கள்"   (பெண் ஓரின சேர்க்கையாளர்கள் )  பற்றிய நாவல்
என்றும்,அவர்களின் உள்ளக் கிடக்கைகள்  குறித்து  காட்சிகளை நகர்த்தி செல்கிறார். இந்த கதைசொல்லி  என்றும்,
இது இப்பொழுது  உலகம் முழுவதும் இருபாலாரிடமும்  பரவிக்கிடக்கின்றதென்றும், சில நாடுகளில் இதற்கு அங்கிகாரம்
கிடைத்திருக்கிறது  என்றும் சொன்ன அவர்,  தான் படிக்கும் காலங்களிலே ஆண் பள்ளிகளிலும்,பெண்கள் பள்ளிகளிலும்
இந்த ஓரின  சேர்க்கைகள்  மறைமுகமாக நடந்தன என்றும் சொன்ன பேராசிரியர்,   இது பாலியல் உணர்ச்சிகளின் பிரவாகம்.
அது தவிர்க்க  முடியாததொன்று.  இந்த கதைப்புலத்தை தியாகலிங்கம் தொட்டிருப்பது அவரது திடத்தை காட்டுகிறது
என்றும்  சொன்னார்.தொடர்ந்து அவர்,  காரைநகரின் பொருளாதார சூழல் பற்றியும், வர்த்தகத்தை  அவர்கள் எப்படி 
வளர்த்துக் கொண்டார்கள் என்றும் ஒரு பேராசிரியருக்குரிய நீட்டு, நெடுப்புகளுடன்  எடுத்து சொன்னார்.

தியாகலிங்கத்திடம் அவர் பல கேள்விகளை முன்வைத்து அவற்றிற்கு பதிலையும் எதிர்பார்த்தார்.
ஐந்து  நூல்கள் பற்றியும் அவர் தனது கருத்துகளை சொல்லி, தனது உரையை நிறைவு  செய்தார்.
சுவாரசியமான  அவரது உரையாடல் பலராலும் ரசிக்க கூடியதாக இருந்தது.  இறுதியாக ஏற்புரைக்காக,
படைப்பாளி தியாகலிங்கம் மேடை ஏறினார். ஏற்புரை என்று   சொல்வதைவிட  அவர் ஏற்கனவே தயாரித்து
வைத்த நன்றி உரையைதான் படித்தார்.  அதில் திரு. எஸ்.பொ  தொடக்கம்  தனது அழைப்பை ஏற்று வந்து தனது
நூல்கள் பற்றி பேசிய அனைவருக்கும் நன்றி சொல்லி  அவர்களுக்கு  நினைவுப் பரிசும் கொடுத்தார்.

பேராசிரியர் ரகுபதி கேட்டிருந்த கேள்விகளில் ஓரிரு  கேள்விகளுக்கே  அவர் பதில் சொன்னார்.
நிகழ்வின்போது இடையிடையே குடிப்பதற்கு சூடான தேநீரும், கடிப்பதற்கு பால்களியும் பரிமாறப்பட்டன.
மிக நீண்ட நேர அமர்வில் ஐந்து புத்தகங்கள் பற்றிய அறிமுக,விமர்சன உரைகளின் ஏற்ற இறக்கங்கள்,
நெளிவு சுளிவுகள், சாதக பாதகங்கள் என்பனவற்றை உள்வாங்கிக்கொண்ட நண்பர் தியாகலிங்கத்திடம் 
விடைபெறும்போது, விமர்சனம் என்பது வெறும் சொற்கள்தானேதவிர ,  நம்மை காயப்படுத்தும் 
கற்கள் அல்ல. உங்கள் பணி தொடர எமது வாழ்த்துகள் என்று கூறி நானும் என் நண்பரும் 
விடைபெற்றுக்கொண்டோம்.
Picture
Picture
Picture
Picture
Picture
© 2013 Designed & Powered by mogans.com. All rights  reserved