Kizhvanam
  • Home
  • Articles
    • Articles1
  • CommonNews
  • TamilFonts
    • TamilFonts cont...1
    • TamilFonts cont...2
    • TamilFonts cont...3
    • TamilFonts cont...4
    • TamilFonts cont...5
    • TamilFonts cont...6
    • TamilFonts cont...7
  • Tutorials
  • Notices
  • Contacts
Picture

சண்முகம் சிவலிங்கம்

       நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று
தன்னைப்பற்றியும், மற்றும் இந்த பூமிப்பந்தில் கவிஞர்களாக, எமுத்தாழர்களாக, நடிகர்களாக,
சமுகசேவை ஆய்வாளர்களாக, தலை சிறந்த விளையாட்டு வீரர்களாக, மற்றும் உண்மையான
துறவிகளாக ஞானிகளாக வாழ்ந்து மறைந்த பிறருக்காகவும், கவியரசு கண்ணதாசன் அவர்கள்
எழுதிய வரிகளாகவே இதை நாம் பார்க்கலாம். அண்மையில் காலமான அமரர் சண்முகம் சிவலிங்கம்
அவர்களும், ஒரு நல்ல ஆசானாக, கவிஞனாக, எழுத்தாளனாகவே கல்முனைப் பிரதேசத்தில் வாழ்ந்து
மறைந்திருக்கின்றார். ஒரு நல்லாசிரியராக மட்டுமில்லாமல், ஒரு சமூகத் தொண்டனாக மனிதநேய
குணநலச்சிறப்புகள் கொண்டவராகவும், அமரர் சண்முகம் சிவலிங்கம் இருந்திருக்கின்றார்.
அமைதியான சுபாவமும், அடக்கமான பேச்சும், அவரின் அடையாளங்களாக இருந்தன.

     1960களில் தனது இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டவர். கல்முனை எழுத்தாளர் சங்கம்,
தொடங்கிய காலகட்டத்தில் இவரும் அதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர். எமது பகுதி
பிரபல்யமான கவிஞர்கள், எழுத்தாளர்களான அமரர்கள் நீலாவணன், பாண்டியூரான் ஆகியோருடன்
நெருக்கமாக இருந்தவர். தமிழ், இலக்கியம், கிராமியக்கவிகள், நாட்டார் பாடல்கள், போன்ற
துறைகளில் இவர் முன்னின்று கிழக்குமாகாண மொழிவழக்கு, அதன் பாரம்பரியம் போன்ற
இலக்குகளை இவர்களுடன் சேர்ந்து முன்னெடுத்துச் சென்றவர்.

 இலங்கையின் தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் அமரர் சண்முகம் சிவலிங்கத்தின் ஆக்கங்கள்
வெளிவந்திருக்கின்றன. அவை கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், வாசகர்களை சென்றடைந்தன.
அவர் நிரந்தரமானவர்தான் அவருடைய பூதவூடல் மறைந்தாலும், புகழுடம்பு மறையாது.
கண்ணதாசன் சொன்னது போல் கவிஞர்களுக்கும், கலைஞர்களுக்கும் மரணம் இல்லை.
நிலமும், நீரும், காற்றும், தீயும், ஆகாயமும், இருக்கும் வரை இவர்களின் புகழ் இருக்கும்.
அமரர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் இழப்பு கிழக்கு மாகாண இலக்கியர்களுக்கு
மட்டுமல்ல, ஈழத்து இலக்கியர்கள் அனைவருக்கும், பேரிழப்பாகவே பார்க்கத் தோன்றுகிறது.
அவரின் ஆத்மா சாந்தியடைய கீழ்வானம் இணையத்தளம் பிரார்த்திப்பதோடு, அன்னாரின்
குடும்பத்தவர்களுக்கும், தனது துயரைம், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

______________________________________________________________________________________

Picture
Picture
அதிமதுரக்குரலுக்கும், அழகுதமிழ் உச்சரிப்புக்கும், தமிழ் வார்த்தைகளின் ஏற்ற,
இறக்கங்களுக்கும், சொற்சுவை, பொருட்சுவை அறிந்து அவற்றை சுவைபட
வானலைகள் மூலம் தாயக, தமிழக தமிழருக்கு தந்த ஒலிபரப்பு தாரகை
திருமதி இராஜேஸ்வரி சண்முகம்  அவர்களின் மறைவு தமிழ்கூறும்                                                                           நல்லுலகத்திற்கு பேரிழப்பாகும். இலங்கை  வானொலி தோன்றிய காலம்                                                                                                        தொட்டு அநேக பெண் அறிவிப்பாளர்கள்  ஒலிபரப்பாளராக
பணிபுரிந்திருக்கிறார்கள். இன்றும் எத்தனையோ பெண் அறிவிப்பாளர்கள் 
இலங்கையில் உள்ள தனியார் தமிழ் வானொலிகளிலும், இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனத்திலும் கடமையாற்றுகிறார்கள் அத்தனைபேருக்கும் 
இராஜேஸ்வரி அவர்கள் ஒரு முன்னோடியாகவும், ஒரு தனித்துவமான
முன்மாதிரியாகவும் இருந்தவர். அவருடைய கணீர் என்ற குரலும், காலம் அறிந்த
அதிவேக அறிவிப்பும் கவர்ச்சியான சொல்லாடலும் அவருக்கே உரிய தனித்துவங்கள்
ஆகும்.

இவர் ஒரு வானொலி அறிவிப்பாளராக மட்டும் இல்லாமல் ஒரு மேடை நடிகையாக, 
ஒரு வானொலி  நடிகையாக, மேடை கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும்
இருந்து பல  லட்சம் மக்களின் பாராடைப் பெற்றவர். இவரின் குரல் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட பலர்
எழுபதுகளில்  இலங்கை வானொலியில் இணைந்து இவருடன் சேர்ந்து பணிபுரியும் பாக்கியம் 
பெற்றார்கள். தன்னடக்கமும், தற்புகழ்ச்சி இல்லாத தன்மையும், எழிமையும்,
அமைதியும் இவரின் அணிகலன்களாக, அடையாளங்களாக இருந்தன என்று சொல்லலாம்.

கொழும்பிலே பிறந்து வளர்ந்தாலும் இவருக்கு வடக்கு, கிழக்கு வட்டார வழக்குகள் 
அத்துப்படி. தனது பள்ளிப்பருவத்திலே பல கலை நிகழ்ச்சிகளிலும், நாடகங்களிலும் 
பங்குகொண்ட இவரை  அந்நாளில் பெயர் பெற்ற நாடக தயாரிப்பாளர்,
இயக்குனர் திரு.சானா அவர்கள் தன்னுடைய  நாடகங்களில்  நடிக்கவைத்தார்.
வானொலி நாடக நடிகையாக இலங்கை வானொலிக்குள்  காலடி எடுத்துவைத்தவர்
பின்பு பகுதி நேர அறிவிப்பாளராகி, நாளடைவில் நிரந்தர அறிவிப்பாளராகினார்.

வர்த்தக சேவை அறிவிப்பாளராக இருந்ததோடு, பல  தரமான இலக்கிய நிகழ்ச்சிகளையும்
இவர்  அவ்வப்போது தயாரித்து வழங்கினார். அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றன.
இவர் பணிபுரிந்த காலத்திலேயே இவரது கணவர் திரு.சி.சண்முகம் அவர்களும், இவரது
மகள் வசந்தி அவர்களும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்தார்கள்.
பின்பு  இவரது மகன்கள் திரு. சந்திரமோகன், திரு. சந்திரகாந்தன் ஆகியோரும்
இவர்வழியில் மேடை அறிவிப்பாளர்களாகவும், பகுதிநேர வானொலி அறிவிப்பாளர்களாகவும்
ஆனார்கள்.

இலங்கை வானொலியின் இனிய குயில் இராஜேஸ்வரி சண்முகம் அவர்களின்
இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தினருடனும், அவரது அபிமானிகளுடனும், எமது
கீழ்வானம் இணையத்தளம் தனது துயரையும் பகிர்ந்து கொள்கிறது.


______________________________________________________________________________________

Picture
Picture
Picture
Picture
Picture
© 2013 Designed & Powered by mogans.com. All rights  reserved