Kizhvanam
  • Home
  • Articles
    • Articles1
  • CommonNews
  • TamilFonts
    • TamilFonts cont...1
    • TamilFonts cont...2
    • TamilFonts cont...3
    • TamilFonts cont...4
    • TamilFonts cont...5
    • TamilFonts cont...6
    • TamilFonts cont...7
  • Tutorials
  • Notices
  • Contacts
Fonts cont... 3

சரி Radio Officer Course படிப்புச் செலவு, உணவு, பிரயாணம்....  வேண்டாம்...  வேண்டாம்...
ஒரு மாதம் உருண்டு,  இரண்டாம் மாத தண்டப்பணத்தையும், அம்மாவிடமிருந்து கறந்துவிட்டேன்.
அவ்வேளையில்தான் Kandy Garments ல் manager ஆக கட‌மையாற்றிய சௌந்தரேஸ்வரன் எனும்
ராசண்ணனால் அறிமுகம் செய்யப்பட்ட மட்டக்களப்பு, நாவற்குடாவைச் சேர்ந்த திரு.சபாரெத்தினம்,
Ford Rhodes  ல் Auditor ஆக இருந்தவரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது இவர்தான் என்
தலையெழுத்தை மாற்றப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது. ஒரு சாந்தமான எப்போதும்
சிரித்த முகம். என்னைப் பற்றி கேட்டறிந்த அவர், உன்னை ஒரு நல்லதொரு விளம்பரக் கம்பனியில்
ஆட்டிஸ்ற் ஆக்கிவிடுகிறேன். உன் திறமையைக் காட்டி முன்னேறு, நல்ல சம்பளமும் கிடைக்குமென்றார்.
கம்பனியில் ஆட்டிஸ்ற்... அதெப்படி?  ஓவியர் என்றால் என்ன ஓவியங்கள் வரைவது, விளம்பர பலகைகள்
வரைவது என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, பெரியதொரு மாற்றம் என் வாழ்வில் நடைபெறவுள்ளது,
என்பதை நான் கனவிலும் காணவில்லை. ஒரு சனிக்கிழமை சபா அண்ணனும், அவரின் இன்னுமொரு
நண்பரான கருணாநிதி என்பவரும், கொள்ளுபிட்டியில் 'Intasel Advertising' க்கு என்னை அழைத்துப்போய் 
Clinton De Alwis என்பவருக்கு அறிமுகம் செய்தனர். பார்த்தவுடன் பார்வையில், கனிவும்,
கண்ணியமும் அவரிடம் தென்பட்டது.

Picture

Clinton De Alwis, Ravi Ondachi என்பவரிடம் என்னை interview பண்ணச் சொன்னார்.... 
Ravi நல்ல சுறுசுறுப்பான, உயரமான, தாடி வளர்த்த மனிதர். இந்த ரவிதான் ZENITH Advertising ல்
என்னை படிப் படியாக Paste up, Junior, Senior, Art Director என உயர்த்திவிடப் போகிறார்,
என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. என்னைப் பற்றி கேட்டறிந்த அவர்,
இது உனக்கு புதிதுதான் பரவாயில்லை, உன்னை நாங்கள் தமிழ் Typographer ஆகவும், Junior Artist ஆகவும் 
சேர்த்துக்கொள்ளலாம், முதலில் உனக்கு ஒரு பரீட்சையென்று, ஆங்கிலத்தில் அச்சடித்திருந்த பேப்பரை காட்டி, 
இதன் மொழிபெயர்ப்பு இதுவென ஒரு letterhead ல், தமிழில் கையால் எழுதப்பட்ட பேப்பரைத் தந்து,
தலையங்கத்தை மாத்திரம், ஒரு அடி நீளம், உயரம் இரண்டு அங்குலத்தில் எழுது என்றார்.. வெள்ளை சித்திரத்தாள்,
இந்தியன் இங், பென்சில், இரேசர், அடித்தடி, செற்ஸ்குயார் போன்றவைகளைத் தந்து ஒரு சித்திரம் வரையும்
மேசையையும் காட்டினார். மொழிபெயர்ப்புத் தாளைப் பார்த்தேன். எனது அபிமான அறிவிப்பாளர் எஸ்.கே.பரராசசிங்கம்
தான் அதை மொழிபெயர்த்திருந்தார். 
  
தலையங்கம் 'தலைபோகிறதா?' அது முடியுதிர்வதற்கான Hair Oil விளம்பரம். படமாளிகையில் எவ்வளவோ
பெரியதாக எழுதிய எனக்கு இது எம்மாத்திரம். இருபது நிமிடத்தில் முடித்தேன். இயன்றளவு கச்சிதமாகவும்,
Rough sketch, இரேஸர் பாவிக்காமல் எழுதியிருந்தேன். ஓரிரு இடங்களில் சிறிது சீரில்லாமல் விலகியிருந்தது.
வந்துபார்த்த அவர். வெள்ளைப் போஸ்ரர் கலரைத் தந்து அந்த இடங்களை touch up பண்ணி சரிசெய்து விட்டு
எடுத்து வா என்றார். அதை கிளின்ரனிடம் காட்டி Very good job, nice என்றார். அவர்கள் இருவரும் ‌ஏதோ
கதைத்துக் கொண்டார்கள். Clinton,   இவரை நாங்கள் வேலைக்கெடுத்துக் கொள்கிறோம்.
திங்களிலிருந்து வேலைக்கு வரட்டும்,  சரியா என்றார். எனக்கு இரவில்தான் வகுப்பு என்பதால்,
உடனே சரி என்றேன். எல்லோரும் சந்தோசமாக விடைபெற்றோம்...

என்ன நடந்ததோ தெரியாது. போன எங்களை ரவி ஓடிவந்து, உங்களை Clinton வரட்டாமென  அழைத்தார்.
என்ன தலைபோய்விட்டதோ என நினைத்தேன். எங்களை இருக்கச் சொல்லி குளிர்பானம் தந்தது மட்டுமல்லாமல்,
" இவருடைய எழுத்தைத் தான்...  Final Concept க்கு நாங்கள் பாவிக்கவிருப்பதால், அதற்கான ஊதியம் இது "  என
ஒரு காசோலையையும், Clinton என்னிடம் தந்தார். நன்றி கூறி விடைபெற்றோம். வெளியில் வந்ததும்
சபா அண்ணன் எவ்வளவு தம்பி cheque எனக் கேட்டார். அப்போதுதான் பார்த்த நான் 75,- ரூபா வென்றேன்.
" Very Good " என்று இருவரும், ஒரே தொனியில் கூறி " interview க்கே சம்பளமா?... You are a very lucky guy..."
என்றபோது என்னைவிட சபா அண்ணனின் முகத்தில் அதிக மகிழ்ச்சியை நான் கண்டேன்.

இந்த சின்ன தலைபோகிறதாவுக்கே ரூபா.75,- என்றால், இன்னும் கால், கை, கழுத்துப் போகிறதல்லாம் எழுதினால்
எவ்வளவு கிடைத்திருக்கும் என்ற கற்பனையில்....  தானாக முன்வந்து மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை
கொண்ட சபா அண்ணரைப் போல நல்ல உள்ளங்கள் நீடுழி வாழவேண்டுமென உளமார வாழ்த்தினேன்.
மூன்றாவது மாதம் நான் அம்மாவுக்கு பணம் அனுப்பினேன் என்றால் பாருங்களேன்....

நேர்முகப்பரீட்சைக்கும் வேதனமா? 
Picture

எழுத்தை அழகு படுத்தி எழுதியதற்கு
விழங்காத மொழியால் திட்டும், அடிபடாத குறையும்...


நான் நிந்தவூர் சினிமாவில் ஓவியனாக இருந்தகாலமது. ஓர்  வாய் பேசமுடியாதவர்
Gate Keeper  ஆக வேலை செய்தார். இந்த போஸ்டர்  தயாரிப்பு, ஒட்டுவது போன்றவற்றில்
திறமைசாலி. 16, 24, A1 (Standard paper size) அளவான பேப்பர்களை ஒன்றாக சேர்த்து
ஒட்டாமல் சிறு புள்ளிகளாக மேலும் கீழும் மாத்திரம் ஒவ்வொரு புள்ளி பசையிட்டு எழுதியபின்
இதனை பிரித்து துண்டு துண்டாக எடுத்துச் சென்று தவறு இல்லாமல் கச்சிதமாக ஒழுங்காக
ஒட்டுவார். நாங்கள் அவரை புகழ்ந்து பேசுவது கண்டு ஆனந்தமடைவார். ஆனால் மகா கோபக்காரர்.

படம் Fantomas Strike Back. அது மேலும் கீழுமாக ஒட்டவேண்டிய இரு துண்டுகள்.
அவர் போஸ்டரை ஒட்ட சென்று விட்டார். நான் விளம்பரம் செய்துவிட்டு பார்க்கிறேன்.
Fantomas நேராகவும், Strike Back ஐ தலைகீழாகவும் ஒட்டியிருந்தார். அழைத்து
அவரது பாஷையில் கையிலிருந்த சிறு  (Handbills) விளம்பரத்துண்டை காட்டி
ஒட்டிய P‌oster ஐயும் காட்டி சரியா எனக்கேட்டேன். வந்ததே அவருக்குக் கோபம்,
இரண்டையும் மாறி மாறிக் காட்டி அவரது மௌன பாஷையில் திட்டினாரே பார்க்கலாம்.
ஏதோ நான் தான் பிழையாக எழுதியது போலவும் அவர் சரியாக ஒட்டியது போலவும்...
சாது மிரண்டால் கேட்கவும் வேண்டுமா? சரி... சரியென ஒத்துக்கொண்டேன்.
என் தலைவிதி... தேவையா?...   அழகாக இருக்கட்டுமேயென நான் எழுத்தை சதுர வடிவில்
மடித்து மடித்து எழுதியது என் தவறா? அவருக்கு உறுப்பான வட்டமும் நேர்கோடுமான
ஆங்கில எழுத்துமட்டும்தான் பரிச்சியம் என்பது இந்த லுாசிக்கு அப்போதுதான் புரிந்தது.
தப்பினேன் பிழைத்தேன். பசை வாழியால் அடி வாங்கவில்லையே என ஒரு நிம்மதி.

Picture



நான் பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே படமாளிகை
போஸ்ரர்கள், விளம்பரப்பலகைகள், வாகன இலக்கப்பலகைகள்,
கோயில் திரைச்சீலைகள் வரைவதால் கைச்செலவு பணத்துக்கு 
என்னிடம் குறைவில்லை. சிறுவயதிலேயே என்னை நிந்தவூர் சினிமா திரைப்படமாளிகைக்கு காலஞ்சென்ற நண்பர் திரு.வி(மால்) மலநாதன்
தான் அறிமுகப்படுத்தினார்.  தன்னம்பிக்கைக்கு உதாரண புருஷர். 
சிறுவனான என்னை நம்பிக்கையூட்டி பெரிய அளவிலான Cut out,
Banner போன்றவற்றை கூட துணிந்து வரையவைத்தவர். 

ஆங்கிலப் படங்களில் கூடிய விருப்பமுள்ள அவர் தன்னையும் ஒரு Cowboy போலவும், தான் ஒரு Client Eastwood போலவும் கற்பனை செய்து எப்போதும் சுருட்டோடு (Cigar) திரிபவர். அந்த நல்ல நண்பரும் இவ்வுலகை வெறுத்து போய்விட்டார் என கேள்வியுற்றபோது அவருடன் பழகிய அந்த அந்த இனிய நினையுகள் கண்முன் தோன்றி மறைந்தன.
 

                                                                                                                                                 தொடர்ச்சி மறு பக்கம்..    

Picture
Picture
Picture
Picture
Picture
© 2013 Designed & Powered by mogans.com. All rights  reserved