Kizhvanam
  • Home
  • Articles
    • Articles1
  • CommonNews
  • TamilFonts
    • TamilFonts cont...1
    • TamilFonts cont...2
    • TamilFonts cont...3
    • TamilFonts cont...4
    • TamilFonts cont...5
    • TamilFonts cont...6
    • TamilFonts cont...7
  • Tutorials
  • Notices
  • Contacts
Picture
மனதிலே சாந்திகிடைக்கும்போது அமைதி ஒரு அழகிய ஆபரணமாக எங்களை 
அலங்கரித்துக் கொள்ளும். ஆனால் எம்மில் பலருக்கு இன்று மனதில் சாந்தியும், 
தங்கள் வாழ்க்கையில் அமைதியும் இருக்கின்றனவா என்றால் இல்லை.

        ஒருவனின்  செயல்பாடுகளும், சிந்தனைக்களும்தான் அவனை ஆட்டிப்படைக்கும்
காரணிகளாகும் என்று  ஒருவன் புரிந்து  கொண்டால் அவன் அமைதி அடைகிறான்.
சாந்தி பெறுகிறான். ஒரு  மனிதன் அமைதியான சூழ்நிலையில் இருக்கும்பொழுதுதான்
தன் அறிவுகொண்டு பிறரை  அறிந்துகொள்ளமுடியும். அமைதி  பெற்ற மனிதன் தன்னை

எப்படி கட்டுப்படுத்திக்கொண்டு  வாழ்வது  என்பதை தெரிந்துகொண்டவன். எப்படி இந்த சமுதாயத்தோடு
இயைந்து  செயல்படுவது என்ற சமூகக் கண்ணோட்டம் புரிந்தவன்.

       அமைதியான நதியினிலே ஓடம் அழகாக  செல்லுமல்லவா? அதுபோல வாழ்க்கையின்
அந்திமக்காலத்திலாவது அமைதிப் புறா  வந்து ஒரு மனிதனின் அருகில் அமர்ந்து கொண்டால்..
வாழ்வில்  வசந்தம்  வரும்.  அமைதியும், அறமும் கொண்ட மனிதன் நேசிக்கப்படுகிறான்.
பிறரால் அவன்  போற்றபடுகிறான். கோடைகாலத்து கொளுத்தும் வெயிலில் இந்த மனிதன்
நிழல் கொடுக்கும்  மரமாகிறான். புயலடிக்கும்போது அடைக்கலம் தரும் பாதுகாப்பு பாறையாகிறான்.
இத்தகைய அமைதி பெற்ற இதயத்தை, இனிமையான சுபாவத்தை, யார் விரும்பாமல்
இருக்கமுடியும்? மழை பெய்தாலும் சரி,வெயில் அடித்தாலும் சரி எந்தவிதமான மாறுதல்கள்
வந்தாலும்  சரி இவர்கள் இனிமையாகவும், அமைதியாகவும், சாந்தி நிலை பெற்றவர்களாகவும் 
இருப்பார்கள். 

       இன்று எத்தனைபேர் இந்த நிலையில் வாழ்கிறார்கள் என்பது  ஆராய்ந்து பார்க்கப்படக் கூடியது
ஒன்றே. வாலிபத்திலோ, நடுத்தர வயதிலோ,  முதுமையிலோ எந்தப்  பருவத்திலும் எம்மவர்கள்
இயந்திரமாக இயங்கவேண்டிய ஒரு  நிலைக்கே  தள்ளப்படுகிறார்கள். அமைதியும், ஆறுதலும்,
ஓய்வும் இல்லாமல்  உருக்குலைந்துபோகும்  பலர் எம்மிடையே வாழ்கிறார்கள். அந்த அற்புதமான
அமைதி  வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது   வெறும் பணம் சம்பாதிக்கும் வாழ்க்கை  அற்பமானதாக,
அர்த்தமற்றதாக தோன்றுகிறது.  இனிமையும், அழகும் நிறைந்த வாழ்வை  தங்கள் கோபத்தால்
பாழ்படுத்திக் கொண்டவர்கள்  எம்மில் ஏராளம். இவர்கள் அமைதியும், இனிமையும் கொண்ட
நீரோட்டத்தில்  தங்களை இணைத்துக் கொள்ள தவறியவர்களே. வாழ்வை கசக்கும்படி செய்து
தங்கள்  உடலில் கெட்ட இரத்தத்தை ஓடச் செய்தவர்கள் இவர்கள். சுய கட்டுப்பாடு இல்லாமல் 
தங்கள் மகிழ்ச்சியையும், வாழ்வையும் நாசமாக்கிக் கொண்டவர்கள் பலர் எம்  சமுகத்தில்
வாழ்கிறார்கள்.  ஆக, எண்ணங்களை கட்டுபடுத்தி தன்னை தூய்மை  ஆக்கிக்கொண்ட
மனிதன் அமைதி அடைகிறான். சுயகட்டுப்பாடுதான் வலிமை. அமைதியான  மனம்தான் சக்தி.
இவற்றை உங்களோடு அணைத்துக்கொள்ள முயலுங்கள். வாழ்க்கை  சுகமாகும்.
அதிலும் அந்திமத்து காலம் அமைதிபெறும்.


_______________________________________________________________________________________
Picture


தமிழ் திரையுலகம் அண்மையில் பல கலையுலக  
மாமேதைகளை இழந்து நிற்கிறது.

நேற்று மறைந்த ரங்கராஜன் என்ற இயற்பெயரை கொண்ட "வாலி"
என்னும் அற்புதக் கவிஞர், திருச்சி வானொலியில் பணியாற்றியபின் 
சென்னை வந்து, பல கஷ்டங்கள் பட்டு, தனது கால் தடத்தை
தமிழ் சினிமாவில் ஆழமாக பதித்துக்கொண்டவர்.





கவிஞர் வாலி அவர்கள் காலத்தை வென்ற கவிஞர். கணக்கற்ற
உள்ளங்களை தன் வசப்படுத்திய பாடலாசிரியர். கவியரசர் கண்ணதாசன்
காலத்திலே அவருக்கு இணையாக திரைப்படப் பாடல்கள் எழுதி
கண்ணதாசனின் பாராட்டுகளையும் பலதடவைகள் பெற்றவர். 

தமிழ் திரைவானில் திலகங்களாக இருந்த எம். ஜி.ஆர்,  சிவாஜி,
மற்றும் அன்றைய அனைத்து கதாநாயகர்களுக்கும், இடைப்பட்ட காலத்து,
அதாவது எண்பது, தொண்ணூறுகளில் வந்த நடிக, நடிகைகள்,
இரண்டாயிரமாம் ஆண்டுக்கு பின் இன்றுவரை வந்த அனைத்து
நடிகர்களுக்கும் ஏற்றவாறு பாட்டெழுதி பெரும் சாதனை படைத்த
பெரும் கவிஞர். நான்கு தலைமுறைகளாக தன்னை மாற்றிக்கொண்டு
செழுமையாகவும், புதுமையாகவும், இனிமையாகவும் பாடல் எழுதி 
வந்தவர் வாலி. இவரை வாலிபக் கவிஞர் என்றும் அழைப்பதுண்டு.

"கண்போன போக்கிலே கால் போகலாமா
 கால் போன போக்கிலே மனம் போகலாமா" என்றும் எழுதுவார்...

"நேத்து ராத்திரி யம்மா. தூக்கம் போச்சிடி யம்மா" என்றும்..

"சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது..
 உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது" என்றும் எழுதி பல
கவிஞர்களை வாய்பிளக்க வைத்தவர்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களுக்காக
முதன் முதலில் இவர் எழுதிய முதல் திரைப்படப்பாடல் ..

"பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா" என்ற பாடலே...

மக்கள் திலகம் எம் ஜி ஆருக்காக, அவர் எழுதிய அனைத்துப்
பாடல்களும் சிறந்தபாடல்களே. அவரின் "படகோட்டி" படத்துக்குரிய
பாடல்கள் முழுதும் வாலி அவர்களே எழுதினார்.

"மூன்றெழுத்தில்  என் மூச்சிருக்கும்- அது
 முடிந்த பின்னால் என் பேச்சிருக்கும்" என்ற பாடலும் ..

" நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்- இனி
 ஏழைகள் வேதனை படமாட்டார்." என்ற பாடலும்

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்,  அதை
 யாருக்காக கொடுத்தான்" என்ற பாடலும் உலகம் உள்ளவரை
எம். ஜி ஆரை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

இவர் சிவாஜிக்காக   எழுதிய பல பாடல்கள் மிக அருமையானவை.
குறிப்பாக 

"மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் " என்ற பாடல்
கவிராசர் கண்ணதாசனே பாராட்டிய பாடலாகும். மற்றும் அவர் எழுதிய

"அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ" என்ற பாடலில்
ஒரு பெண்ணை வர்ணிக்கும் வரிகளாக ...

"இளநீரை சுமந்து நிற்கும் தென்னைமரமல்ல...
மழைமேகம் குடைபிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
இங்குமங்கும் மீன் பாயும் நீரோடையல்ல
இதற்குமேலும் இலக்கியத்தில் வார்த்தையேது சொல்ல" என்று எழுதி
பல கவிஞர்களை, தன்பால் திரும்பிப் பார்க்க வைத்தவர் இந்த அற்புத கவிஞர்.

ஒரு பட்டுக்கோட்டை, ஒரு கவியரசர், ஒரு வாலிதான்.
இதற்குமேல் என்ன சொல்ல இருக்கிறது.

அண்மைக் காலங்களில் அவர் அரிதாரம் பூசிய புருசர்களுக்கும்  எழுதினார்.
அவதார புருஷர்கள்  பக்கமும் தன் எழுதுகோலை திருப்பினார்.
தமிழ் திரையுலகில் எதுகை, மோனையுடன் பாட்டெழுதும்
ஒரே கவிஞர் வாலி அவர்களே. ஸ்ரீ ரங்கத்தில் ஒரு அய்யங்கார் குடும்பத்தில்
பிறந்த இந்த மகா கவிஞன், சென்னை வந்து தமிழ் திரை உலகில்
ஒரு நடிகனாக, பாடல் ஆசிரியனாக இருந்து புகழ்பூத்து மறைந்து விட்டார்.
தமிழ் கூறும் உலகம் இருக்கும்வரை அவர் பாடல்களும் இருக்கும்.

அவர் புகழும் வாழும்.

அய்யா உங்கள் ஆத்மா அமைதி பெறட்டும்.

_____________________________________________________________________________

Picture







மற்றுமொரு இசை மேதை இன்று மறைந்துள்ளார்.  
தமிழ் திரைப்படஉலகம் இருக்கும்வரை
பேசப்படும் இரட்டையர்கள் மெல்லிசை மன்னர்கள். 
எம்.எஸ் விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி.
இவர்களில்  மூத்தவரான டி.கே ராமமூர்த்தி அவர்கள் 
இன்று மூச்சு திணறல் காரணமாக  வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காததால்
மரணமடைந்துள்ளார்.



 
அண்மையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மெல்லிசை மன்னர்களுக்கு
மிகப்  பெரிய பாராட்டு விழா எடுத்து கௌரவப்படுத்தினார். எம்.எஸ்,வியும், டி.கே ராமமூர்த்தியும்
இணைந்து இசையமைத்த பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழிக்கமுடியாதவை.
அத்தனை பாடல்களும் அருமையிலும் அருமை. புதிய பறவை  படத்தில் வரும்
"எங்கே நிம்மதி எங்கே நிம்மதி" என்ற பாடலில் இவரின் வயலின் இசை மிகப் பிரமாதம்.
பணம் படைத்தவன் படத்தில் வரும் "கண்போன போக்கிலே கால் போகலாமா" என்ற
பாடலில் வரும் வயலின் இசை மிக அருமை.

எம்.எஸ்.வியை விட்டு  இவர் பிரிந்த பின் சில படங்களுக்கு தனித்து இசையமைத்தார்.
அவற்றில்   "நான்" திரைப்படப் பாடல்கள் பேசப்பட்டவை. அதில் "அம்மனோ சாமியோ அத்தையோ
மாமியோ" என்ற பாடல் மிகப் பிரசித்தம். இந்தப் பாடலுக்கு ஜெயலலிதா அவர்கள் அருமையாக
நடனம் ஆடி இருப்பார்கள். அறுபதுகளில் திரை உலகை தங்கள் வசம் வைத்திருந்த
மெல்லிசை மன்னர்களில் ஒரு மன்னன் மரணித்து விட்டார். அவர் மறைந்தாலும்
அவர் இசை என்றும் வாழும்..  அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

________________________________________________________________________________________
Picture









பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் அவர்கள் சென்னையில் காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் அவர் மிகவும் இனிமையான பாடல்களை பாடியிருக்கின்றார்.  அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம் கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும்...                   சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம்
பெற்றவராகவும் அவர் திகழ்ந்தார்.
 
தமிழ் திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவையாக
இன்றும் திகழ்கின்றன. 1930 ஆம் ஆண்டு ஆந்திராவில் காக்கிநாடாவில் இவர்  பிறந்தார்.
அவரது  இயற்பெயர் பிரதிவாதி பயங்கரா ஸ்ரீனிவாஸ் ஆகும். கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் எழுதிய அருமையான, ஆழமான பாடல்கள்  ஸ்ரீனிவாஸ்   அவர்களுக்கு கிடைத்தன.
அன்று அறுபதுகளில் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்காக இவர் பாடிய அத்தனை
பாடல்களும் காலத்தால் அழியாதவை... இவர் குரலில் இருக்கின்ற குழைவும்,
இனிமையும், கமகமும், பொடி சங்கதிகளும் அபூர்வம்...அருமை...
இவர் பாடிய "மயக்கமா கலக்கமா" என்ற பாடல்தான் இன்று பிரபல்யமாக
இருக்கின்ற கவிஞர் வாலிக்கு கூட தைரியத்தைக் கொடுத்து அவரை
திரையுலகிற்கு மீண்டும் வரவழைத்தது.
 
இவரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" பாடலைப் பாடித்தான் இன்று சாதனையாளராக
இருக்கும் "பாடும் நிலா" S.P. பாலசுப்ரமணியம் அவர்கள் M.S.V அவர்களிடம் வாய்ப்பு பெற்றார்.
இவர் பாடகர் மட்டுமல்ல...நல்ல கவிஞரும் கூட... அன்னாரின் மறைவு தமிழ் இசை
பிரியர்களுக்கு பெரும் இழப்பே.
 
அவர் மறைந்தாலும் உலகம் உள்ளவரை அவரின் பாடல்கள் அவரின் காந்தக் குரலில்
ஒலித்துக் கொண்டே இருக்கும். இன்றும் புதிய தலைமுறையினரும் இந்த பாடல்களை
கேட்டு ரசிக்கிறார்கள்... சாகாவரம் பெற்ற பாடல்களை பாடிய அந்தக் காந்தக் குரலோன்
மறைந்து விட்டார். அவர் மறைத்தாலும் காலா காலத்துக்கு அவரின் பாடல்கள் ஒலித்துக்
கொண்டே இருக்கும் அவரின் ஆத்மாவுக்கு சாந்தி கிடைக்கட்டும்...  


Picture
Picture
Picture
Picture
Picture
© 2013 Designed & Powered by mogans.com. All rights  reserved